69. அருள்மிகு தாயுமானவர் கோயில்
இறைவன் தாயுமானவர்
இறைவி மட்டுவார்க்குழலம்மை
தீர்த்தம் காவிரி
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருச்சி, தமிழ்நாடு
வழிகாட்டி சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், இரயில் நிலையத்தில் இருந்தும் 5 கி.மீ. தொலைவு. சென்னையிலிருந்து இரயில், பேருந்து மற்றும் விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தலச்சிறப்பு

Trichy Gopuramதிரிசிரன் என்னும் மூன்று தலைகளையுடைய அசுரன் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான். பல ஆண்டுகள் அவன் தவம் செய்தும் இறைவன் தரிசனம் தரவில்லை. அதனால் திரிசிரன் தனது தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி அக்னியில் போட்டான். மூன்றாவது தலையை வெட்டியபோது சிவபெருமான் காட்சி தந்தார். அசுரனின் வேண்டுகோளின்படி இத்தலத்தில் இருந்து அருள்புரிவதாகவும், திரிசிரன் வழிபட்டதால் 'திரிசிரபள்ளி' என்று பெயர் பெற்றதாகவும் தலவரலாறு கூறுகிறது.

ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. கைலாய மலையை யார் பெயர்க்கிறார்களோ அவரே பெரியவர் என்பது போட்டி. ஆதிசேஷனை மீறி, வாயு பகவான் பெயர்க்க, அதில் ஒரு துண்டு விழுந்த இடம்தான் திருச்சியிலுள்ள மலைக்கோட்டை என்று கூறப்படுகிறது. தாயுமானவ சுவாமி கோயில் மலைக்கோட்டையின் மீதுதான் அமைந்துள்ளது. உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல 417 படிகளும், தாயுமானவ சுவாமி சன்னதிக்குச் செல்ல 273 படிகளும் உள்ளன.

Trichy Moolavarதிருச்சியில் தனகுத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியான ரத்னாவதி கர்ப்பவதியாக இருந்தபோது தனகுத்தன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தான். மனைவிக்கு உதவியாக அவளது தாயாரை அழைத்திருந்தார். அப்போது பெய்த மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் ரத்னாவதியின் தாயார் வரமுடியவில்லை.

இதற்கிடையே ரத்னாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவள் திருச்சியில் குடிகொண்டுள்ள சிவபெருமானான மாத்ருபூதேஸ்வரரை வேண்டினாள். உமையொரு பாகனான ஈசன் உடனே அவளது தாயார் வடிவத்தில் வந்து அவளுக்கு உதவி செய்ய, ரத்னாவதி அழகான குழந்தையை பிரசவித்தாள். பின்னர் சிலநாட்கள் இருந்து அவளுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தார் சிவபெருமான்.

ஓரிரு நாளில் காவிரியில் வெள்ளம் வடிந்தது. ரத்னாவதியின் தாயார் தனது மகள் வீட்டிற்கு வர, அங்கே தன்னைப் போலவே உருவம் உள்ளவரைக் கண்டதும் வியந்தாள். உடனே சிவபெருமான் மறைந்து, தானே தாயாக வந்ததை தெரிவித்து, அவர்களுக்கு அருளினார். அன்றுமுதல் இத்தலத்து சுவாமி 'தாயுமானவர்' என்று போற்றப்படுகின்றார்.

Trichy Utsavarமூலவர் 'தாயுமானவர்' என்னும் திருநாமத்துடன், மிகப் பெரிய லிங்க வடிவத்துடன், மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். சாரமா முனிவர் செவ்வந்தி மலர்களைக் கொண்டு இவரை வழிபட்டதால் 'செவ்வந்திநாதர்' என்னும் பெயரும் உண்டு. இக்கோயிலில் கொடிமரம் மூலவருக்கு பின்புறம் உள்ளது. சாரமா முனிவருக்காக சிவபெருமான் மேற்கு திசை நோக்கி திரும்பியதால் சன்னதி வாசலும், கொடிமரமும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

அம்பிகை 'மட்டுவார்குழலி' அல்லது 'சுகந்த குந்தளாம்பிகை' என்னும் திருநாமத்துடன் வழிபடப்படுகின்றாள். நான்கு கரங்களுடன் கைகளில் அங்குச, பாசாங்குசம் ஏந்தி, அபய, வரத ஹஸ்தங்களுடன் அன்னையும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றாள். சிலர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் வாழைத்தார் படைத்து, பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்கிறார்கள்.

கர்ப்பிணி பெண் இருக்கும் வீட்டைச் சேர்ந்தவர்கள் 21 கொழுக்கட்டை, 21 அப்பம், ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அம்பாளுக்கு வைத்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். சிலர் தாயுமானவ சுவாமி மீது பாடப்பட்ட தேவாரப் பாடல்களை தினந்தோறும் வீட்டில் பாராயணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.

Trichy Uchi Pillaiyarமலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானவர் கோயிலும், மலை உச்சியில் பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளது. அயோத்தியில் இராமபிரான் பூஜை செய்த அரங்கநாதரை விபீஷணன் இலங்கைக்குக் கொண்டு செல்லும் வழியில் இங்குள்ள காவிரிக் கரையில் பூஜை செய்ய எண்ணினார். விக்கிரகத்தை கீழே வைக்கக்கூடாது என்று இராமபிரான் கூறியதால் சிறுவனாக வந்த விநாயகப் பெருமானிடம் கொடுத்துவிட்டு காவிரிக்குச் சென்றார். விபீஷணன் சென்றவுடன் விநாயகர் அரங்கநாதர் விக்கிரகத்தைக் கீழே வைத்துவிட, கோபமடைந்த விபீஷணன் அவரை அடிக்க விரைந்தார். விநாயகர் ஓடிச் சென்று மலைக்கோட்டை உச்சியில் நின்று அவருக்கு தரிசனம் அளித்தார். அன்று முதல் 'உச்சிப் பிள்ளையார்' என்று அழைக்கப்பட்டார். விநாயக சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இக்கோயிலில் நவக்கிரக சன்னதியில் சூரியன் தனது மனைவிகளாக உஷா, பிரத்யுஷாவுடன் காட்சி தருகின்றார். மற்ற கிரகங்கள் அனைத்தும் இவரை நோக்கி அமைந்துள்ள காட்சி வேறு எங்கும் இல்லை. பங்குனி மாதம் மூன்று நாட்கள் மாலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.

இராமபிரான், உமாதேவி, பிரம்மா, இந்திரன், அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், சப்த கன்னியர் மற்றும் நாககன்னியர் வழிபட்ட தலம்.

சித்திரை மாதம் 14 நாட்கள் பிரம்மோற்சவமும், பங்குனியில் தெப்போற்சவமும் நடைபெறுகிறது. மேலும் அம்பாளுக்கு ஆடிப்பூர திருவிழா 11 நாட்களும், நவராத்திரி 10 நாட்களும், விநாயகருக்கு விநாயக சதுர்த்தி விழா 14 நாட்களும், முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி திருவிழா 7 நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பராபரக்கண்ணி பாடிய தாயுமான சுவாமிகள் இத்தலத்து இறைவன் அருளால் பிறந்து அவரையே வழிபட்டு முக்தி அடைந்தார். தை மாத விசாக நட்சத்திரத்தன்று அவரது குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் 4 பாடல்களும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் திருவாசத்தின் போற்றித் திருவகவலில் இத்தலத்தைக் குறிப்பிடுகின்றார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும். உச்சிப் பிள்ளையார் கோயில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com